பாகிஸ்தானுடன் நதி நீர் பகிர்ந்து கொள்ள முடியாது: மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாப் மாநிலம் சென்றார். பஞ்சாப் மாநிலம் பதிந்தாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
பதிந்தா: பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாப் மாநிலம் சென்றார். பஞ்சாப் மாநிலம் பதிந்தாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி:-
மீண்டும் பாகிஸ்தான் மக்களிடம் பேச விரும்புகின்றேன்; பாகிஸ்தான் மக்கள் அந்நாட்டு ஆட்சியாளர்களிடம் பேசவேண்டும்; இந்தியாவிற்கு எதிராக போரிட வேண்டுமா, அல்லது ஊழல், கருப்பு பணம் மற்றும் ஏழ்மைக்கு எதிராக போராட வேண்டுமா என்பது தொடர்பாக அவர்கள் முடிவுசெய்ய வேண்டும். பெஷாவரில் பள்ளியின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, ஒவ்வொரு இந்தியரும் பெரும் கவலை அடைந்தனர். பாகிஸ்தான் மக்கள் அவர்களின் ஆட்சியாளர்களிடம் சொல்ல வேண்டும், ஊழல் மற்றும் கள்ள நோட்டிற்கு எதிராக போராடவேண்டும் என்றார்
மேலும் பாகிஸ்தானில் பாய்ந்து செல்லும் சிந்து நதி மீது இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது. பாகிஸ்தான் வழியாக சிந்து நதி கடலில் கலக்கிறது. அந்த நதி நீர் நமது விவசாயிகளுக்கு சொந்தமானது. எனவே நமது விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதற்காக எதையும் செய்வோம்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே, கடந்த 1960-ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவு நீரை மட்டும்தான் பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கி வந்தது. இந்தியாவில் இருந்து பாயும் ஜீலம், செனாப், சட்லெஜ், சிந்து, பீஸ் மற்றும் ராவி ஆகிய ஆறு நதிகள் இணைக்கப்பட்டு அதில் இருந்து 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. 20 சதவீத நீரை மட்டுமே இந்தியா பயன்படுத்திக் கொள்கிறது. இந்தியாவுக்கு சொந்தமான நதிநீர் பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.