சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி வழக்கில்,சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவிடம் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெறுகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லண்டனில் பிரையன்ஸ்டன் பகுதியில் சொத்து வாங்கியதில் 1.9 மில்லியன் பவுண்டுகள் வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை பிரியாங்காவின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக் கூடாது என்று பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமீன் கேட்டார். தொடர்ந்து ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, பிப்ரவரி 6 ஆம் தேதி அமலாக்கத்துறையில் விசாரணைக்கு ஆஜராகவும் வைப்புத் தொகையாக ரூ.1 லட்சம் கட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 


ராபர்ட் வதேராவின் வழக்கறிஞர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த்குமாரிடம் `விசாரணைக்கு `தன் கட்சிக்காரர் முழுமையாக ஒத்துழைப்பார்' என்று உறுதிமொழி அளித்தார். இந்த வழக்கில் ஏற்கெனவே மனோஜ் அரோரா என்பவரிடம் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. முதலில் மனோஜ அரோரா அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை தன்னிடம் விசாரணை நடத்துவதாகக் கூறி  விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தார். சிறப்பு நீதிமன்றத்திலும் புகார் தெரிவித்தார். வெளிநாட்டில் ராபர்ட் வதேராவுக்கு உள்ள சொத்துகள் குறித்து அனைத்து விவரங்களும் மனோஜ் அரோராவுக்குத் தெரியும் என அமலாகத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். 


அரோராவின் குற்றச்சாட்டுக்கு நீதிமன்றத்தில் பதிலளித்த அமலாக்கத்துறை, `கறுப்புப் பணம் பதுக்கிய விவகாரத்தில் வருமானவரித்துறை மனோஜ் அரோராவிடம் நடத்திய விசாரணையின் போது, காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரியங்காவின் கணவர்  லண்டனில் சொத்து வாங்கிய விவகாரத்தில் மனோஜ் அரோராவின் கைங்கரியம் இருப்பது தெரியவந்தது. எந்த அரசியல் பின்புலமும் இந்த வழக்கில் இல்லை'' என்று தெரிவித்தது. 


இந்நிலையில், நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ராபர்ட் வதேரா நேரில் ஆஜராகினார். 5 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், தம் மீதான புகார்களை ராபர்ட் வதேரா மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வழக்கில் ஆஜராக வந்த வதேராவுடன் அவரது மனைவி பிரியங்கா காந்தியும் உடன் வந்தார்.


அமலாக்கத்துறை அலுவலகத்தில் வதேரா காரில் இருந்து இறங்கிய பின்னர், பிரியங்கா காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்றார். இன்று காலை மீண்டும் வதேரா ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறையினர் கூறுகையில், ராபர்ட் வதேராவின் பதில்களை பதிவு செய்துகொண்டோம். அதனை பரிசீலித்த பின் மீண்டும் அடுத்தகட்ட விசாரணை நடத்துவோம் என தெரிவித்தனர். அடுத்தகட்ட விசாரணைக்காக இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் ராபர்ட் வதேரா அமலக்கத்துறை முன்பு ஆஜராக உள்ளார் என தெரிகிறது.


இது குறித்து வதேரா வழக்கறிஞர் சுமன் ஜோதி கைத்தான் கூறுகையில், ராபர்ட் வதேராவிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார். இது அரசியல் ரீதியாக அவர் மீது போடப்பட்ட பொய்வழக்கு. இந்த குற்றச்சாட்டுகளை ராபர்ட் வதேரா எப்போதும் மறுத்தே வருகிறார். அமலாக்கத்துறை எப்போது மீண்டும் விசாரணைக்கு அழைக்கிறதோ அப்போது ஆஜராகுவார்" எனத் தெரிவித்தார். இந்த வழக்கில், வருகிற 16 ஆம் தேதி வரை, ராபர்ட் வதேராவுக்கு, டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது!