நாளை நடை திறப்பு- சபரிமலை ஐயப்பன் கோவிலில் பலத்த பாதுகாப்பு
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த பின்னர் சபரிமலை கோவில் நடை, நாளை முதல் திறக்கப்படுவதால் கோவிலின் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த பின்னர் சபரிமலை கோவில் நடை, நாளை முதல் திறக்கப்படுவதால் கோவிலின் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் வரலாற்று தீர்ப்பினை வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், தமிழகத்தில் சில பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
உச்ச சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்துவோம் என கேரள முதல்வர் ஏற்கனவே அறிவித்து நிலையில், தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என கேரளாவில் நேற்று பாஜக-வினர் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் "மண்டல பூஜைக்காக நாளை சபரிமலையில் நடைதிறக்கப்பட உள்ள நிலையில், கோவிலுக்கு வரும் பெண்கள் உள்பட அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
இதனிடையே சபரிமலை கோயில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மாலை திறக்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்கு செல்ல தடை இல்லை என்பதால் நாளை முதலே பெண் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.