சைபுல்லாவின் தந்தை செயலால் தேசமும் பாராளுமன்றமும் பெருமைப்படுகிறது- ராஜ்நாத்சிங்
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது.
சைபுல்லாவின் தந்தை முகம்மது சர்தாஜ் செயல்பட்டால் இந்த தேசமும் பாராளுமன்றமும் பெருமைபடுவதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஜாப்தி ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் காலையில் சென்று கொண்டிருந்த போபால்-உஜ்ஜைனி ரெயிலில் குண்டுவெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச போலீசார் 3 பேரை உடனடியாக கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் முகமது சைபுல்லா என்ற பயங்கரவாதி தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், அவரை சரணடையுமாறு வலியுறுத்தினர்.
ஆனால் அவர் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் திருப்பி சுட்டதில் சைபுல்லா கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட சைபுல்லாவின் உடல் தற்போது லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் வைக்கப்பட்டு உள்ளது.
அவரது உடலை வாங்க கான்பூரில் வசித்து வரும் அவரது தந்தை சர்தாஜ் மறுத்து விட்டார். தேச விரோத செயலில் ஈடுபடும் ஒருவன் எனது மகனாக இருக்க முடியாது. அவனது உடலை நாங்கள் வாங்கமாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், சைபுல்லாவின் தந்தை முகம்மது சர்தாஜ் செயல்பட்டால் இந்த தேசமும் பாராளுமன்றமும் பெருமைபடுவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மக்களவையில் பேசுகையில் தெரிவித்தார்.