கேரளா நடிகை சரிதா நாயரின் வேட்பு மனுக்கள் இரண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் தற்போது முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைப்பெற்று வருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது வீடுகள், அரசு அலுவலகங்களுக்கு சூரிய மின் சக்தி தகடுகளை அமைத்து தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டதாக சரிதா நாயர் மீது வழக்கு தொடரப்பட்டது.


இந்நிலையில் தற்போது அவர் வயநாடு மற்றும் எர்ணாகுளம் ஆகிய மக்களவை தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது இரண்டு வேட்பு மனுக்களையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சில மலையாள திரைப்படங்களிலும் டிவி சீரியல்களிலும் சரிதா நாயர் நடித்துள்ளார். மின் சக்தி தகடுகள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பின் ஜாமினில் வந்த சரிதா நாயர், அப்போதைய கேரள முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி, ஹிபி ஈடன் உட்பட பல அமைச்சர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.


இந்நிலையில், தற்போதைய மக்களவை தேர்தலில், கேரளாவின் எர்ணாகுளம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஹிபி ஈடன் அவரை எதிர்க்கும் விதமாக, சுயேட்சையாக போட்டியிட சரிதா நாயர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேப்போல் காங்கிரஸ் தலைவர் ராகுல் வயநாட்டில் போட்டியிடுவதை அறிந்து அங்கும் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.


தன்னை பாலியல் கொடுமைபடுத்திய காங்கிரஸ் பிரமுகர்கள் பற்றி பலமுறை புகார் அளித்தும் ராகுல் நடவடிக்கை எடுக்காததால் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதாக நடிகை சரிதா நாயர் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் நேற்று வேட்புமனு பரிசீலனை நடைப்பெற்றது. சோலார் பேனல் மோசடியில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சரிதா நாயரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 


இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளதாக சரிதா நாயரின் வழக்கறிஞர் தெரிவித்தார். எனினும் அதற்கான ஆவணங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் தாக்கல் செய்யப்படாததால் இரண்டு தொகுதிகளிலும் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.