தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரிப்பார் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைதான 4 பேரை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த பரிசீலிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.


ஹைதராபாத்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி இரவு, தெலங்கானா மாநிலம் சைபராபாத் காவல் ஆணையர் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பெண் கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 4 பேரையும், கடந்த 6 ஆம் தேதி விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற நிலையில், போலீசாரை தாக்கிவிட்டுதப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். 


காவல்துறையினரின் இந்த என்கவுன்ட்டருக்கு பொதுமக்கள் தரப்பில் ஒருபுறம் ஆதரவு இருந்தாலும் மற்றொரு புறம் எதிர்ப்பும் இருந்து வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், என்கவுன்ட்டர் செய்த போலீஸார் மீது தனியாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, வழக்கறிஞர் பி.எல்.சர்மா, பிரதீப் சர்மா ஆகியோர் தனித்தனியாகப் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்கள்.


இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே,” இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக தெலங்கானா உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை நாங்கள் பரிசீலிக்கிறோம். உண்மை குறித்து அறிய இருக்கிறோம். ஆதலால், இந்த வழக்கை டெல்லியைச் சேர்ந்த உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இந்த வழக்கை விசாரிக்கலாம் என்று கருதுகிறோம். விரைவில் ஓய்வு பெற்ற நீதிபதியை அமர்த்தி விசாரணையைத் தொடங்கச் சொல்வோம்” எனத் தெரிவித்தார்.