பள்ளி சிறுமி ஒருவரைக் கடந்த 7 மாதங்களாகப் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 18 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 9-வது வகுப்பு படிக்கும் மாணவி, தனது தந்தையுடன் நேற்று காலை காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிஷோர் ராய் என்பவரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகார் மனுவில், 'தன்னைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 18 பேர் கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தனர்' என தெரிவித்துள்ளார். 


இதையடுத்து, தனியார் பள்ளிக்குச் சென்ற காவல்துறையினர், தலைமை ஆசிரியர்  உதய்குமார், ஆசிரியர் பாலாஜி மற்றும் இரண்டு மைனர் சிறுவர்களைக் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மீதி 15 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.


முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்) உள்ள தகவலின் படி, கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பள்ளியில் கழிவறையில் வைத்து மூன்று மாணவர்கள் இந்த மாணவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதைப் படம் எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியில் சொன்னால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். அதன் பின்னர், அந்தச் சிறுவர்கள் இந்த வீடியோவை மற்ற நண்பர்களுக்கும் காண்பிக்க, அதைக் காட்டி பலர் பள்ளி வளாகத்திலே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.


சில மாதங்களில் 15 சிறுவர்கள் அந்த வீடியோவைப் பயன்படுத்தி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னர் இந்த வீடியோ இரண்டு ஆசிரியர்களுக்கும் பரவ அதைப் பயன்படுத்தி அவர்களும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 


இதுதொடர்பாக காவல்துறை காண்காணிப்பாளர் ஹரி கிஷோர் ராய் கூறுகையில், முதலில் பயத்தால் அமைதியாக இருந்த மாணவி பின்னர் தனது அனைத்து நம்பிக்கையும் இழந்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இதனைத் தெரிவித்துள்ளார். அவர், போலீஸிடம் சென்றால் உனது பெயரும் பள்ளியின் பெயரும் கெட்டுவிடும் என மாணவியை போலீஸிடம் செல்ல விடாமல் தடுத்துள்ளார். அதன் பின்னர் ஒரு நாள் பள்ளி நேரம் முடிந்த பின்னர் அந்த மாணவியை அழைத்த தலைமை ஆசிரியர் தனது அறையில் வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 



இதனால் மனமுடைந்த மாணவி தனது தந்தையிடம் சொல்லி புகார் அளித்துள்ளார்” என்றார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தனி விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது. இந்த சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!