ஜம்முவில் இயல்புநிலை திரும்பியதையடுத்து,பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்முவில் கத்துவா மற்றும் சம்பா மாவட்டங்களில் நேற்று 144 தடையுத்தரவு தளர்த்தப்பட்டதையடுத்து, வெள்ளிக்கிழமை தொழுகைக்கு மக்கள் வீதிகளுக்கு வந்தனர். பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே தொழுகைகள் அமைதியான முறையில் நடைபெற்றன. ஜம்மு மாவட்டத்தில் இன்று முதல் தடையுத்தரவு வாபஸ் பெறப்பவடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஒருவாரகாலமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன.


ஜம்முவைப் பொருத்தவரை முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாக காவல்துறை ஏடிஜிபி முனீர் அகமது நிலைமையை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காலை 11 மணிமுதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள்,அலுவலகங்களும் நேற்று வழக்கம் போல் இயங்கின. 5வது நாளாக மொபைல் மற்றும் இணைய சேவைகள் முடங்கியுள்ளன. இந்த உத்தரவும் ஓரிரு நாட்களில் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ரயில் பேருந்து,விமான சேவைகளும் இயங்கத்தொடங்கியதால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கட் எடுத்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உதாம்பூர் உள்ளிட்ட சில இடங்களில் தடையுத்தரவு அமலில் இருந்தபோதும் அங்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீநகரில் தடை உத்தரவு நாளை தளர்த்தப்படலாம் என்றும் தொலைத் தொடர்பு சேவைகள் சீராகலாம் என்றும் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் உறுதிமொழியை அடுத்து அமைதியான சூழல் நிலவுவதால் இஸ்லாமிய மக்கள் பக்ரீத் பண்டிகையை விருப்பம் போல் கொண்டாட முடியும் என்றும் ஆளுநர் உறுதியளித்துள்ளார்.


இதனிடையே ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால் சர்தார் வல்லபபாய் பட்டேலின் பிறந்தநாளான அக்டோபர் 31 முதல் ஜம்மு காஷ்மீரும் லடாக்கும் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக இயங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.