டெல்லி: நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி முடிவடைந்தது. அதில் 17 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 


இதனையடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி (வியாழக்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தகள் நடைபெற உள்ளது. அதேநாளில் தமிழகத்தின் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.


மக்களவை தேர்தலை பொருத்தவரை, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 10 தொகுதிகளிலும், உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளிலும், அசாம், பீகார் மற்றும் ஒடிசா ஆகிய இடங்களில் 5 தொகுதிகளிலும், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளிலும், ஜம்மு-காஷ்மீரில் 2 தொகுதிகளிலும், மணிப்பூர், திரிபுரா மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் 1 தொகுதிகளிலும் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடைபெற உள்ளது.


இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைவதால், பல அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு தங்கள் கட்சிக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். 


இன்று பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் என  நான்கு பேரணிகளில் உரையாற்றுகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரளாவில் பல்வேறு பேரணிகளில் கலந்துக்கொண்டு வருகிறார்.