கேரளா மாநிலத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.  வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.  பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது.


கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், யுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் இதுவரை 12 ஆயிரம் பேர்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் சீனா மட்டுமின்றி தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


கொரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது. சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான மாணவி தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.


இந்நிலையில் அதே கேரளாவில் மற்றொருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது நபரும் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.