நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு பின்னரே அஜித் பவாருக்கு பதவி...
மகாராஷ்டிராவில் நடந்து வரும் அரசியல் நாடகத்திற்கான புதிய திருப்பத்தில், NCP தலைவர் அஜித் பவார் வியாழன் அன்று துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்பில்லை என்று ஆதாரங்கள் தெரிவித்தன.
மகாராஷ்டிராவில் நடந்து வரும் அரசியல் நாடகத்திற்கான புதிய திருப்பத்தில், NCP தலைவர் அஜித் பவார் வியாழன் அன்று துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்பில்லை என்று ஆதாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் சிவசேனா தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர், NCP தலைவர் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்பார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று (வியாழன்) மாலை 6.40 மணியளவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்க உள்ளார். டிசம்பர் 3-க்கு முன்னர் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் உத்தவ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு பின்னர் தான் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்பார் என்று NCP தலைவர் சரத் பவார் முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
உத்தவ் தவிர, மூத்த சிவசேனா தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுபாஷ் தேசாய் ஆகியோர் வியாழக்கிழமை அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். NCP-யிலிருந்து சாகன் பூஜ்பால் மற்றும் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரத், அசோக் சவான் ஆகியோரும் வியாழக்கிழமை (நவம்பர் 28) அமைச்சரவையில் இடம்பிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்காக நவம்பர் 30-ஆம் தேதி மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் ஒரு நாள் சிறப்பு அமர்வு ஏற்பாடு செய்யப்படும் என்றும், சபாநாயகர் தேர்ந்தெடுப்பது மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக புதன் அன்று, புதிய மகாராஷ்டிரா அரசாங்கத்தில் ஒரே துணை முதல்வர் தனது கட்சியைச் சேர்ந்தவர் என்றும், சட்டமன்ற சபாநாயகர் பதவி காங்கிரசுக்கு செல்லும் என்றும் NCP தலைவர் பிரபுல் படேல் உறுதிப்படுத்தியிருந்தார்.
மகாராஷ்டிரா சபாநாயகர் பதவியை காங்கிரசுக்கு NCP ஒப்புக் கொண்டுள்ள நிலையில் முன்னாள் முதலமைச்சர் பிருத்விராஜ் சவான் இப்பதவிக்கான தேர்வாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாயன்று, முத்தரப்பு கூட்டணியின் தலைவராக தாக்கரே ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். NCP, காங்கிரஸ் மற்றும் சிவசேனா MLA-க்கள் மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை தங்கள் தலைவராக அறிவித்து ஒரு கடிதத்தை சமர்ப்பித்தனர், இதைத் தொடர்ந்து கோத்யாரி வியாழக்கிழமை உத்தவ் தலைமையிலான ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இந்நிலையில் மகாராஷ்டிராவின் புதிய ஆட்சி இன்று உதயமாகும் ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகிறது.