மும்பை: மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசாங்கம் வீழ்ச்சியடைந்த நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து அரசாங்கத்தை அமைப்பதற்கான பாதை தெளிவாகி உள்ளது. இந்த மூன்று கட்சிகளின் தலைவர்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மும்பையில் உள்ள ட்ரைடென்ட் ஹோட்டலில் சந்தித்தனர். இதில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray) சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக உத்தவ் தாக்கரே இருப்பார் என்பது தெளிவாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தவ் தாக்கரே பதவியேற்பு மூலம், தாக்கரே குடும்பத்தின் பாரம்பரியம் உடைக்கப்படும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். அதாவது சிவசேனா நிறுவனர் பாலாசாகேப் தாக்கரே தனது குடும்பத்தில் எந்த உறுப்பினரும் நேரடியாக அதிகாரத்தில் பங்கேற்க மாட்டார் என்று கூறியிருந்தார். ஆனால் தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முறையாக ஒருவர் அரசியல் பதவிக்கு வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray)  டிசம்பர் 1 ஆம் தேதி சிவாஜி பூங்காவில் முதல்வராக பதவியேற்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இன்று நடைபெற்ற கூட்டத்தில் சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மகா விகாஸ் அகாடி (Maha Vikas Aghadi)  என்று அழைக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மஹா விகாஸ் அகாதியின் சட்டமன்றக் கட்சியின் தலைவராக உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தின் போது, உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray) என்.சி.பி (Nationalist Congress Party) தலைவர் சரத் பவாரை வணங்கி அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றார்.


கடந்த வெள்ளிக்கிழமை என்ன நடந்தது:-


அன்று, மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசாங்கம் அமைப்பது தொடர்பாக காங்கிரஸ், என்.சி.பி மற்றும் சிவசேனா தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நடந்தது. அந்த சந்திப்பு முடிந்ததை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே இருப்பார் என்ற கொள்கையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது என்றார். 


ஆனால் ஆலோசனை கூட்டத்திலிருந்து வெளியே வந்த உத்தவ், முதலமைச்சர் பதவி பற்றி எதுவும் கூற மறுத்துவிட்டார். பெரும்பாலான பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. ஆன்ல முதலமைச்சராக பதவி ஏற்பது குறித்து இன்னும் நான் ஒப்புக் கொள்ளவில்லை என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார்.


கடந்த சனிக்கிழமை நடந்தது:-


அதற்கு அடுத்த நாள், மகாராஷ்டிரா அரசியலில் நடந்த வியத்தகு விசியம் என்னவென்றால், ஒரே இரவில் திடிரென பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சி சில எம்.எல்ஏ-க்களுடன் சேர்ந்து கூட்டணியை உருவாக்கியது. அன்று அதிகாலை 5.47 மணிக்கு மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து தேவேந்திர ஃபட்னாவிஸ் இரண்டாவது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்றார். ஷரத் பவாரின் மருமகன் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இவர்களுக்கு மாநில ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சிவசேனா தலைமையில் அட்சி அமைய உள்ளது என நினைத்திருந்த வேளையில், பாஜகவின் திட்டம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. 


அதன்பிறகு நடந்தது:-


பாஜக-வின் செயலுக்கு எதிராக என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டாக மனு தாக்கல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணையை நீதிபதி என்.வி.ரமணா நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. நேற்று இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இறுதி தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு ஒத்தி வைத்தனர். இந்தநிலையில், இன்று காலை மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. 


அப்பொழுது மஹாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணிக்கு நடைபெற வேண்டும். வாக்கெடுப்பில் எந்தவித இரகசியமாக இருக்கக் கூடாது. இந்த நிகழ்சியை நேரலை செய்ய வேண்டும். அனைத்து கட்சிகளும் ஜனநாயக மாண்பை கண்டிப்பாக கடைபிடிக்கவும், காப்பாற்றவும் வேண்டும் என உத்தரவிட்டது.


நாளை பாஜக தலைமையிலான அரசு பெரும்பான்மையினை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், தற்போது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.