சண்டிகர்: புதிதாக நிறைவேற்றப்பட்ட விவசாய மசோதா விவகாரம் தொடர்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (National Democratic Alliance (NDA)) இருந்து சிரோமணி அகாலிதளம் விலகியுள்ளதாக SAD கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் செப்டம்பர் 26ஆம் தேதியன்று இரவு அறிவித்தார். கட்சியின் மையக் குழு கூட்டத்திற்கு பிறகு சுக்பீர் சிங் பாதல் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"இன்று இரவு நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் ஷிரோமணி அகாலிதள மையக் குழுவின் உயர்நிலைக் குழு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற ஒருமனதாக முடிவு செய்தது" என்று பாதல் கூறினார்.


கட்சி வெளியிட்ட அறிக்கையின்படி, "குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் பயிர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டரீதியான சட்டமன்ற உத்தரவாதங்களை வழங்க மத்திய அரசு பிடிவாதமாக மறுத்ததாலும், பஞ்சாப் மற்றும் சீக்கியர்களின் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு போதிய கவனம் கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது".


மேலும், "ஜம்மு மற்றும் காஷ்மீரில் அதிகாரபூர்வ மொழியாக இருக்கும் பஞ்சாபி மொழியின் அந்தஸ்தை அந்த யூனியன் பிரதேசங்களில் இருந்து விலக்குவது என பல பிரச்சனைகளில் பஞ்சாப் மாநிலத்திற்கு எதிராக செயல்படும் மத்தியில் ஆட்சியில் இருக்கும்  தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது" என்று சிரோமணி அகாலி தளம் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், இரண்டு விவசாய மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டால், குறைந்தபட்ச ஆதரவு விலை ரத்து செய்யப்படும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதே காரணத்திற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் விவசாயிகளும் போராட்டம் நடத்துகின்றனர். 


ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் அரசு கொள்முதல் செய்யும் முறை தொடரும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    


Read Also | ஐ.நாவில் இனியும் எத்தனை ஆண்டுகள் இந்தியா வெளியில் இருக்க வேண்டும்? பிரதமர் மோடி அதிரடிக் கேள்வி!