யார் ஆட்சி அமைப்பது..? மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்த சிவசேனா கட்சியினர்
சிவசேனா கட்சியியை சேர்ந்த ராம்தாஸ் கதம் மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோர் மகாராஷ்டிரா மாநில ஆளுனரை சந்தித்துள்ளனர்.
புதுடெல்லி: கடந்த 10 நாட்களாக மகாராஷ்டிராவில் யார் தலைமையில் ஆட்சி அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இன்று சிவசேனா கட்சியியை சேர்ந்த ராம்தாஸ் கதம் மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோர் மகாராஷ்டிரா மாநில ஆளுனரை சந்தித்துள்ளனர். பாஜக-சிவசேனா கூட்டணி மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் (Maharashtra Assembly Elections 2019) பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும், அதிகாரப் பகிர்வு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த சந்திப்பு மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொத்தம் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்று பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க தனி பெரும்பான்மை பெற்றது. ஆனால் பாஜகவுடன் சேர்ந்து மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கான 50-50 சூத்திரத்தில் சிவசேனா பிடிவாதமாக இருக்கிறது. அதாவது ஐந்து ஆண்டு கால ஆட்சியில், இரடண்டரை ஆண்டு காலம் சிவசேனாவை சேர்ந்தவருக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கையை பாஜக தரப்பில் ஏற்கவில்லை. ஆனால் சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்க தயாராக உள்ளதாக பாஜக கூறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க குறைந்தது 145 தொகுதிகளின் பெரும்பான்மை வேண்டும். ஆனால் தனிபெரும் கட்சியாக யாரும் அதிக இடங்களை வெல்லவில்லை. தனியாக ஆட்சி அமைக்க பாஜக-விற்கு போதுமான எண்ணிக்கை இல்லை. அதேபோல 56 இடங்களை மட்டும் வென்ற சிவசேனாவுக்கும் அதிகாரம் இல்லை. இதனால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 104 இடங்களை பெற்றது. ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு தருவதாகக் கூறியுள்ளது. அதேபோல மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவு கோரினால், அதை காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும் என்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் தல்வாய் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.