காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யக் கோரி மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் மகன் கார்த்திகேய சவுகான் போபால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பர் 28-ஆம் நாள் சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் அம்மாநிலத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் மத்தியப் பிரதே மாநிலம் ஜாபுவா என்னுமிடத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது பனாமா ஆவணங்களில் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் மகன் பெயர் உள்ளதாகவும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். 


இதற்குப் பதிலளித்த சிவராஜ்சிங் சவுகான், தன்மீதும் தன் குடும்பத்தினர் மீதும் ராகுல்காந்தி பொய்க் குற்றச்சாட்டுக்களைக் கூறுவதாகத் தெரிவித்தார்.



இந்நிலையில் சிவராஜ் சிங் சவுகானின் மகன் கார்த்திகேய சவுகான், தன்னைப் பற்றிப் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறிய காங்கிரஸ் தலைரவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யக் கோரி போபால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் நவம்பர் 3-ஆம் நாள் விசாரணைக்கு வருகின்றது.


இந்த விவகாரம் குறித்து மத்திய பிரதேச மாநில பாஜக தரப்பு தெரிவிக்கையில்.. "காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு ராகுல் காந்தி பெரும் தவறு செய்துள்ளார். அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும்" என குறிப்பிட்டுள்ளது.