தொடரும் பாஜகவின் ராஜதந்திரம்!! 10 எஸ்.டி.எஃப் எம்எல்ஏ-க்கள் BJPயில் ஐக்கியம்
சிக்கிம் மாநிலத்தின் மிக முக்கியமான பிராந்திய கட்சிகளில் ஒன்றான சிக்கிம் ஜனநாயகக் கட்சியின் (எஸ்.டி.எஃப்) 10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்து உள்ளனர்.
புதுடெல்லி: வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் பாஜகவுக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இந்த மாநிலத்தின் மிக முக்கியமான பிராந்திய கட்சிகளில் ஒன்றான சிக்கிம் ஜனநாயகக் கட்சியின் (எஸ்.டி.எஃப்) 10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த எம்.எல்.ஏக்கள் பாஜகவின் நிர்வாகத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் கட்சியின் மூத்த தலைவர் ராம் மாதவ் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தனர். மாநில அரசியலில் இந்த சம்பவம் முன்னாள் முதலமைச்சரரும், எஸ்.டி.எஃப் கட்சியின் தலைவருமான பவன் குமார் சாம்லிங் ஒரு எச்சரிக்கையாக அமைத்துள்ளது.
கடந்த 24 ஆண்டுகளாக சிக்கிமில் ஆட்சியிலிருந்த பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக கட்சி 15 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியை பறிகொடுத்தது. 32 தொகுதிகளில் 17 தொகுதிகளில் வெற்றி பெற்று சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஆட்சியைப் பிடித்தது.
நாட்டிலும் மிக நீண்ட காலமாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக பவன் குமார் சாம்லிங் சாதனை படைத்துள்ளார். பாஜக ஆட்சி இல்லாத ஒரு வடகிழக்கு மாநிலம் என்றால் அது சிக்கிம் மட்டுமே. தற்போது எஸ்.டி.எஃப் கட்சியின் 10 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்திருப்பது சிக்கிம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.டி.எஃப் நிறுவனர் மற்றும் தலைவர் பவன் குமார் சாம்லிங். 1993 முதல் 2019 மே வரை தொடர்ச்சியாக ஐந்து முறை மாநில முதல்வராக இருந்தார். அவரது தலைமையின் கீழ், இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் எஸ்.டி.எஃப் தோல்வியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி (எஸ்.கே.எம்) தேர்தலில் வெற்றி பெற்று, பிரேம் சிங் தமாங் சிக்கிம் மாநிலத்தின் முதல்வரானார். அதற்கு முன்பு, பிரேம் சிங் தமாங் சிக்கிம் ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.