தலைநகர் டெல்லி தற்போது இயல்பு நிலைமைக்கு திரும்புகிறது: ராஜ்நாத் சிங்!
வன்முறையால் பாதிக்கப்பட்ட டெல்லியின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்புவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்!!
வன்முறையால் பாதிக்கப்பட்ட டெல்லியின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்புவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்!!
பெங்களூரு: கலவரம் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட டெல்லி இப்பொழுது இயல்பான வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழனன்று பெங்களூருவில் தெரிவித்தார். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்திருந்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு இடையே, டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மோதல் வெடித்தது. இந்த மோதல் கலவரமாக உருவெடுத்ததை அடுத்து தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் வீடுகள், கடைகள், வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டன.
சில வாகனங்கள், கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி போலீசார் மட்டுமின்றி, துணை ராணுவப்படையினர், அதிரடிப் படையினர் கலவரம் பாதித்த பகுதிகளில் குவிக்கப்பட்டனர். தற்போதுவரை லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் இருவரும், ஜேபிசி மருத்துவனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். குருதேஜ் பகதூர் மருத்துவமனையில் 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களுள் ஒரு பெண் உட்பட 9 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 200-க்கும் மேற்பட்டோர், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காயமடைந்த பெரும்பாலானோர் கலவரக்காரர்களிடமிருந்து தப்பிக்கும் பொழுது கீழே விழுந்து காயமடைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் தற்போதைய தகவலின் படி இதுவரை சுமார் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கலவரம் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட டெல்லி இப்பொழுது இயல்பான வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழனன்று பெங்களூருவில் தெரிவித்தார். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிகழ்வில் பேசுகையில், "டெல்லியின் நிலைமை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது" என்று சிங் கூறினார். சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து தேசிய தலைநகரில் அதிகரித்து வரும் கலவரங்கள் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
எவ்வாறாயினும், நேற்று டெல்லியில் அமைதி ஏற்பட ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட கோரிக்கை குறித்து கருத்து கூற ராஜ்நாத்சிங் மறுத்துவிட்டார். டெல்லியில் நடந்த கலவரத்தின்போது நிலைமையை கட்டுப்படுத்த போலீசாரால் முடியவில்லை. அதனால் உடனடியாக ராணுவத்தை அங்கு வரவழைக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.