மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்... போராட்டத்தில் இறங்கிய சிறு வணிகர்கள்!
ஒரு நாள் பந்த போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, அடுத்த மாதம் முதல் மின்கட்டணம் குறைக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
பெங்களூரு: தேர்தலில் பல இலவச வாக்குறுதிகளை அளித்த காங்கிரஸ், வெற்றி பெற்று சித்தராமையா கடந்த மே 20-ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் வாக்குறுதிகள் உடனடியாக அமலுக்கு வராததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். எனவே முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் ஒன்றான 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஒரு பக்கம் இலவச மின்சாரம் அளித்த நிலையில், மறுபுறம் செல்வை ஈடு செய்யும் வகையில் மின் கட்டண உயர்வை அறிவித்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது கர்நாடக அரசு. இதனை கண்டித்து கர்நாடகாவில் வணிகர்கள் மற்றும் சிறு தொழில் அதிபர்கள் ஒரு நாள் பந்த் கடைபிடித்து வருகின்றனர்.
கர்நாடக வர்த்தக மற்றும் தொழில் சங்கம் அறிவித்த பந்த் போராட்டம்
மின் உயர்வினால் வணிகர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹூப்பள்ளியில் உள்ள கர்நாடக வர்த்தக மற்றும் தொழில் சங்கம் (KCCI) ஒரு நாள் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி, காங்கிரஸ் ஆளும் கர்நாடகா மாநிலம் முழுவதும் சிறு வணிகர்கள், வணிக நிறுவனங்கள், தொழிலதிபர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வீட்டு இணைப்புகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் 'க்ருஹ ஜோதி' திட்டத்திற்கான பதிவு செயல்முறையை இந்த வார தொடக்கத்தில் மாநில அரசு தொடங்கிய நேரத்தில் அவர்களின் எதிர்ப்புகள் நடக்கின்றன.
கர்நாடகம் முழுவதும் போராட்டம்
ஹூப்பள்ளி-தார்வாட், ஷிவமொக்கா, பெலகாவி, பல்லாரி, விஜயநகர், தாவாங்கரே, கொப்பல் உள்ளிட்ட மாவட்டத் தலைமையகங்களில் பேனர்கள், சுவரொட்டிகள், பதாகைகளை ஏந்தியவாறு வணிகர்கள், தொழிலதிபர்கள் பேரணியாகச் சென்றனர். விலை உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். பெலகாவியில் ஏராளமான வியாபாரிகள் மற்றும் சிறு, குறு தொழில் அதிபர்கள் பதாகைகள் ஏந்தியவாறு துணை ஆணையர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.
சிறு வணிகங்களை பெரிதும் பாதித்துள்ள மின் கட்டண உயர்வு
KCCI செயல் தலைவர் சந்தீப் பிடாசாரியா, மின் கட்டண உயர்வு 50 முதல் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இது சிறு வணிகங்களை மிக அதிகம் பாதித்துள்ளது என்று கூறினார். மகாராஷ்டிராவின் எல்லையோர நகரமான பெலகாவியில் போராட்டக்காரர் ஒருவர், கட்டண உயர்வு காரணமாக பல தொழில்கள் அண்டை மாநிலத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்க | கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்... ஆனால் சில நிபந்தனைகள் உண்டு!
சிறு தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம்
பந்த் அழைப்பின் எதிரொலியாக மாநிலத்தின் பல பகுதிகளில் பல கடைகள் மூடப்பட்டு சிறு தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மாவட்டத் தலைமையகமான பிதார் நகரில், பல கடைகள் அடைக்கப்பட்டிருந்தன மற்றும் பந்த் காரணமாக பிரதான சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
அவசரகால சேவைகள் தொடர்ந்து செயல்படும்
கர்நாடக வர்த்தகம் மற்றும் தொழில் சங்கம் (KCCI), மற்ற மாவட்ட வர்த்தக மற்றும் வர்த்தக சங்கங்களுடன் இணைந்து, மின் கட்டணத்தின் "நியாயமற்ற உயர்வுக்கு" எதிர்ப்பு தெரிவிக்கும் பந்த் அழைப்பை ஆதரித்துள்ளது. பெல்காமில், அவசரகால சேவைகள் தவிர அனைத்து வர்த்தகங்கள் மற்றும் தொழில்கள், போராட்டத்திற்கு ஆதரவாக தங்கள் நிறுவனங்களை மூடி வைக்குமாறு வர்த்தக மற்றும் தொழில்கள் சபை (பிசிசிஐ) கேட்டுக் கொண்டுள்ளது.
வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு அளித்துள்ள சிபிஎம் கட்சி
சிபிஎம் கட்சியும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. இருப்பினும், FKCCI, KASSIA மற்றும் Peenya Industries Association உட்பட பல வர்த்தக அமைப்புகள் இன்றைய பந்த்தில் இருந்து விலகிக் கொண்டுள்ளன. மேலும், வேலைநிறுத்தம் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே என்றும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் வாகனங்கள் தொடர்ந்து இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஒரு நாள் பந்த போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, அடுத்த மாதம் முதல் மின்கட்டணம் குறைக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
மேலும் படிக்க | 5 தேர்தல் வாக்குறுதிகள்: கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ