கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவன தலைவரின் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சின்னம் கொண்ட படம் இருப்பது தற்போது பர பரப்பாக பேசப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மார்ச் 19-ம் தேதி அன்று  ஒரு தனியார் தொலைக்காட்சியில் "கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ஃபேஸ்புக்கில் உள்ள 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களைத் திருடி, டிரம்ப் தேர்தலில் வெற்றிபெற உதவி செய்ததாக செய்தி வெளியிட்டது. இந்த செய்தியால் உலக முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பல சிக்கல்கள் உருவாகியுள்ளன.


அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை ஜெயிக்க வைக்க, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் இணைய பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அப்போது அந்த நிறுவனம் சுமார் 5 கோடி அமெரிக்க பேஸ்புக் வாடிக்கையாளர்களின் விவரங்களை திருடியதாக தெரிய வந்தது. இது குறித்து அந்த நிறுவனம் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் விசாரணை நடத்தி வருகின்றன. 


பல நாட்டு தேர்தல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறிவரும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா,  இந்திய தேர்தல்களிலும் பணிபுரிந்ததாக தெரிய வந்தது. இது குறித்து காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் தாங்கள் பணியாற்றியதாக இந்த விவகாரத்தை உலகின் பார்வைக்கு கொண்டு வந்த முன்னாள் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா ஊழியர் கிறிஸ்டோபர் வைலி நேற்று கூறினார்.


இதை தொடர்ந்து அந்த நிறுவனம் பற்றிய ஒரு ஆவணப்படத்தின் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த காட்சியில், பி.பி.சி செய்தி நிறுவன நிருபர் ஜேமி பார்ட்லட், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவன தலைவர் அலெக்ஸாண்டர் நிக்ஸை சந்திக்கிறார். அப்போது சுவற்றில் காங்கிரஸ் கட்சியின் சின்னம் கொண்ட ஒரு படம் மாட்டப்பட்டிருப்பது தெரிகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கும் அந்த நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பதை தற்போது இந்த புகைப்படம் உறுதி செய்துள்ளது. 


"அது போட்டோஷாப் செய்யப்பட்டது கிடையாது. நான் அங்கு இருந்தேன். அந்த படம் எனக்கு நினைவிருக்கிறது" என ஜேமி ட்விட்டரில் கூறியுள்ளார்.