பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்
இந்திய ராணுவ வீரர்கள் இருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டதற்கு, பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதைக்குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்தூல் பசீத்தை அழைத்து, பாகிஸ்தான் ராணுவத்தின் மனிதாபிமானற்ற செயலுக்கு இந்தியாவின் கடுமையான கண்டனங்களை தெரிவித்ததாகவும்,
பாகிஸ்தான் ராணுவம் பாட்டல் பகுதியில் துப்பாக்கிச் சூட்டை நடத்தி, இந்திய ராணுவத்தின் கவனத்தை திசை திருப்பியதாகவும், அந்த சமயத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த பகுதியில் உள்ள தடயங்களை ஆராய்ந்து பார்க்கும் போது 250 மீட்டர் தூரம் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியிருப்பது உறுதியாகி உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மே 1-ம் தேதி அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவம் இந்திய வீரர்கள் நயீப் சுபீதர் பரம்ஜீத் சிங் மற்றும் பிரேம் சிங் ஆகியோர் தலையை வெட்டி அவர்களை படுகொலை செய்தது.