வெப்பமயமாதலால் கடல் நீர்மட்டம் உயர்வு; கடலோர நகரங்களுக்கு ஆபத்து!!
கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இந்தியாவின் 45 கடலோர துறைமுக நகரங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என காலநிலை மாற்ற அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது!
கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இந்தியாவின் 45 கடலோர துறைமுக நகரங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என காலநிலை மாற்ற அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது!
மொனாக்கோவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமீபத்திய காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசு குழு (IPCC) சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் கோல்கட்டா, மும்பை, சூரத் மற்றும் சென்னை ஆகிய 4 இந்திய கடலோர நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான இடைநிலை அரசுக்குழு எச்சரித்துள்ளது.
புவி வெப்பமயமாதல் மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வு குறித்து 36 நாடுகளைச் சேர்ந்த 100 விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையை ஐநா வெளியிட்டது. அதில், நாசா விஞ்ஞானியான ஜோஷ் வில்லிஸ் அளித்துள்ள அறிக்கையில், பூமி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணம் கடலும் வெப்பமடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் வில்லிஸ் எச்சரித்துள்ளார்.
இந்த அறிக்கை தொடர்பாக ஐநா-வின் IPCC (intergovernmental panel on climate change) அமைப்புத் தலைவர் ஹொசாங் லீ, கார்பன் டை ஆக்ஸைடின் அளவைக் குறைத்தால் மட்டுமே மக்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரங்களுக்கும் ஏற்படும் விளைவுகளைச் சமாளிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் முன்னர் மதிப்பிட்டதை விட கடல் நீர்மட்டம் உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் நீரில் அதிகரித்து வரும் அமிலத்தன்மையால் பனிப்பாறைகள் உருகும் வேகமும் உயர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளை விட தற்போது கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. கடல் நீர் மட்டம் உயர்வதால் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் உடனடியாக பாதிக்கப்படுவார்கள் என்றும் ஐநாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமயமலை உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இந்தியாவின் 45 கடலோர துறைமுக நகரங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் குறிப்பாக சென்னை, மும்பை, கொல்கத்தா, சூரத் ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் கடல்நீர் புகும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் கடல் நீர் ஆபத்துகள் ஒவ்வொரு ஆண்டும் நிகழக்கூடிய ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான கடலோர பகுதிகள், சிறிய தீவுகள், சிறிய கடலோர கிராமங்கள் நீருக்குள் மூழ்கிவிடும் என்றும் IPCC வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.