தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு, 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு தடை ஆகியவற்றை கண்டித்து தென் மாநில லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினார்கள்.


இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய 6 மாநில லாரி உரிமையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.


இதனால் தமிழகத்தில் நான்கு லட்சம் லாரிகள் ஓடவில்லை. தென் மாநிலங்கள் முழுவதும் சுமார் 30 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆங்காங்கே லாரிகள் நிறுத்தப்பட்டன.


வேலை நிறுத்தம் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு லாரிகள் எதுவும் வரவில்லை. இதே போல் தமிழகத்தில் இருந்தும் வெளி மாநிலங்களுக்கு லாரிகள் இயக்கப்படவில்லை.


பால், குடிநீர், மருந்து, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லக்கூடிய லாரிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த லாரிகள் மட்டும் ஓடின.


லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சரக்கு போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. 2-வது நாளாக வேலை நிறுத்தம் நீடிப்பதால் உணவுப்பொருட்கள், காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.


சுமூகமான தீர்வு ஏற்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.