இனி குட் மார்னிங் இல்லை! ஜெய் ஹிந்த் என்று தான் சொல்ல வேண்டும்! பள்ளிகளுக்கு உத்தரவு!
மாணவர்களிடையே தேசபக்தியை வளர்ப்பதற்கு இனி குட் மார்னிங் என்று சொல்வதற்கு பதில், ஜெய் ஹிந்த் என்று சொல்ல வேண்டும் என பள்ளிகளுக்கு ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஹரியானா அரசு சார்பில் ஹரியானா பள்ளிக் கல்வி இயக்குனரகம் முக்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹரியானாவில் உள்ள பள்ளிகளில் வரும் சுதந்திர தினத்திலிருந்து "குட் மார்னிங்" என்ற பாரம்பரிய வழக்கத்திற்கு பதிலாக, இனி "ஜெய் ஹிந்த்" என்று கூற வேண்டும் என தெரிவித்துள்ளது. "பள்ளி மாணவர்களிடையே ஆழ்ந்த தேசபக்தி மற்றும் தேசிய பெருமிதத்தை ஏற்படுத்துவதற்காக, 'குட் மார்னிங்' அல்லது 'குட் ஈவினிங்' என்பதற்குப் பதிலாக 'ஜெய் ஹிந்த்' என்று சொல்ல வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் ஒவ்வொரு நாளும் சொல்வதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டின் உணர்வும், இந்தியாவின் வளமான வரலாற்றின் மீது மரியாதை அதிகமாகும். நம் நாடு என்ற உணர்வு அனைத்து மாணவர்களுக்கு வரும்” என்று பள்ளிக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஜெய் ஹிந்த்" என்ற சொல் முதன்முதலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் சுதந்திரப் போராட்டத்தின் போது பயன்படுத்தப்பட்டது. இந்த வார்த்தை நாட்டின் சுதந்திரத்திற்காக பல தியாகங்களை செய்த தலைவர்களை பற்றிய சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும். 'ஜெய் ஹிந்த்' என்ற சொல் பல்வேறு பின்னணிகளை சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைத்து, குழுவாகச் செயல்பட உதவுகிறது. ஒவ்வொரு நாளும் இதைச் சொல்வது மாணவர்கள் ஒழுக்கமாகவும் சமநிலையுடனும் இருக்க உதவுகிறது. இது அவர்களின் நாட்டின் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை மதிக்க நினைவூட்டுகிறது. இந்த சொல் மாணவர்களை ஊக்கமளிக்கிறது மற்றும் இந்தியா அடுத்த கட்டத்திற்கு செல்ல மாணவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நினைவூட்டுகிறது. 'ஜெய் ஹிந்த்' என்ற வார்த்தை இந்தியாவை மேம்படுத்த உதவும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் உள்ள 14,300 அரசு பள்ளிகளில் மொத்தம் 23.10 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மேலும் அங்குள்ள 7,000 தனியார் பள்ளிகளில் அரசுப் பள்ளிகளுக்கு நிகரான மாணவர் எண்ணிக்கை உள்ளது. சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் விழாவுக்கு முன்னதாக இந்த புதிய விதியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்விதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், தொகுதிக் கல்வி அலுவலர்கள், தொகுதி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு இந்த சுற்றறிக்கை விநியோகிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த உத்தரவு மற்ற அறிக்கைகளை போலவே சாதாரண ஒன்று என்றும், இதனை பின்பற்றவில்லை என்றால் எந்த தண்டனையும் இல்லை என்றும், இதற்காக புதிய விதிகள் அல்லது சட்டங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
முற்போக்கு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் அனில் கௌசிக், இந்த புதிய யோசனையை வரவேற்றுள்ளார். மேலும் இது மாணவர்கள் தங்கள் நாட்டை மேலும் நேசிக்க உதவும் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் இவற்றை தினசரி பின்பற்றுவது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது. அனைவரும் இதனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஹரியானா அரசு பள்ளி ஆசிரியர்களின் அமைப்பு பொதுச் செயலாளர் பிரபு சிங் இது குறித்து பேசுகையில், மாணவர்கள் இந்த புதிய ஜெய் ஹிந்த் என்ற சொல்லுக்கு பழகுவதற்கு நேரம் எடுக்கும். மாணவர்கள் 'நமஸ்தே' என்பதற்குப் பதிலாக 'குட் மார்னிங்' என்று சொல்லத் தொடங்குவதற்கு நீண்ட காலம் ஆனது. மாணவர்கள் தங்கள் கலாச்சாரத்தின் மரபுகள் மற்றும் அர்த்தமுள்ள விஷயங்களை விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ