அயோத்தி வழக்கில் மத்தியஸ்த பேச்சுவார்த்தையை முழுமையாக முடிக்க சமரசக் குழுவுக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அவகாசம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பாக விசாரணையில் இருந்து வருகிறது.


இந்த விவகாரத்தில், இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தம் குழுவை நியமித்து கடந்த மார்ச் 8 தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, ஓய்வு பெற்ற நீதிபதி எஃப்.எம்.கலிஃபுல்லா தலைமையில், ஆன்மிக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள மூவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், "இந்தக் குழு, தனது பணிகளை 4 வாரங்களுக்குள் தொடங்க வேண்டும். சமரச நடவடிக்கையை 8 வாரங்களில் முடிக்க வேண்டும். சமரச பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்களை நேரடியாக உச்ச நீதிமன்றத்திடமே தெரிவிக்க வேண்டும். ஊடகங்களுக்கோ அல்லது வெளியிலோ தகவலை கசியவிடக்கூடாது" என மத்தியஸ்தம் குழுவுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. 


இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை இன்று நடைபெற்றது. அதில், சமரச பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிக்க கால அவகாசம் வேண்டும் என்று மத்தியஸ்த குழு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. அவர்களது கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வருகிற ஆகஸ்ட் 15 வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.