சாதி, மதத்தை வைத்து வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை: உச்சநீதிமன்றம்
சாதி மற்றும் மதத்தை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி: சாதி மற்றும் மதத்தை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் மக்களவை தேர்தல் மற்றும் சில மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதற்க்கட்ட மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 97 தொகுதிகளுக்கான இரண்டாவது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது.
நாடும் முழுவதும் தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்களர்களை கவர பல சலுகைகளை அறிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சில கட்சிகள் வன்முறை மற்றும் வெறுப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் சாதி மற்றும் மதத்தை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் மதத்தை வைத்து நேரடியாக தேர்தல் பரப்புரையில் பேசி வருகின்றனர்.
இதனால் மதசார்ப்பற்ற ஜனநாயக நாட்டில் சாதி மற்றும் மதத்தை வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. அப்பொழுது தலைமை நீதிபதி தேர்தல் ஆணையத்தை பார்த்து "நீங்கள் என்ன செய்கிறீர்கள், சாதி மற்றும் மதத்தை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள். எத்தனை பேருக்கு நோட்டிஸ் வழங்கியுள்ளீர்கள் என தலைமை நீதிபதி கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், விதிமுறையை மீறும் கட்சி மற்றும் வேட்பாளருக்கு எதிராக நோட்டிஸ் பிறப்பிக்க முடியும். அவர்களின் மீது வழக்கு பதிவு செய்ய முடியும். ஆனால் அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என வாதிட்டது.
இதனையடுத்து தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு சாதி மற்றும் மதத்தை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் கட்சியின் மீதும் வேட்பாளர்களின் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.