கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத பெண்களை சேர்ந்து வாழுமாறு வற்புறுத்த முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனைவி என்பவள் அசையா சொத்தோ அல்லது உயிரற்ற பொருளோ இல்லை. எனவே மனைவியை கட்டாய படுத்தி வாழ கணவர் மனைவியை வற்புறுத்த முடியாது. 


மனைவி உங்களுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் உங்களுடன் அவள் எப்படி சந்தோசமாக சேர்ந்து வாழ மடியும் என்ற உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முன்னதாக டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் கணவர் தன்னை மிகவும் அடித்து கொடுமைப்படுத்தி வருவதாகவும், அவருடன் சேர்ந்து வாழ முடியாது என உச்ச நீதிமன்றத்தில் அந்த பெண் வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கு  நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் அந்த பெண்ணின் கணவர், தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறினார். 


இதற்கு பதிலளித்த நீதிபதிகள், 'கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத பெண்ணை, சேர்ந்து வாழுமாறு வற்புறுத்த முடியாது. நீங்கள் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று கூறினர்.


அப்போது அந்த பெண் தனக்கு கணவர் எந்தவித ஜீவனாம்சமோ, பணமோ தர தேவையில்லை விவாகரத்து கிடைத்தால் மட்டும் போதும், அப்போது அவர் மேல் தொடுத்துள்ள கிரிமினல் வழக்கை வாபஸ் வாங்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். 


இதனை தொடர்ந்து கணவர் தரப்பு வக்கீலிடம் பேசிய நீதிபதிகள், அவர் (கணவர்) தனது மனைவியை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்று கூறியதுடன், எப்படி இவ்வாறு நியாயமற்றவராக இருக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் இது குறித்து அவருடன் வக்கீல் பேசுமாறு கூறி, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற ஆகஸ்டு மாதம் 8-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.