ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். 
சமீபத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தது, அப்போது ஓர் பிரபல ஆங்கில பத்திரிகையில் ரபேல் பேரம் குறித்த ரகசிய ஆவணங்கள் வெளியாகின. அதே ஆவணங்கள், சீராய்வு மனுக்களுடனும் இணைக்கப்பட்டிருந்தன.


இந்த ஆவணங்கள், ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். பின்னர், “ஆவணங்கள் திருடப்படவில்லை, நகல் எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.


இந்நிலையில், சீராய்வு மனுவுக்கு மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளதாவது.,


மனுதாரர்களின் சீராய்வு மனு பரவலாக புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. நாட்டின் எதிரிகள் கையிலும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் தேசத்தின் பாதுகாப்பே அபாயத்தில் உள்ளது.


மனுதாரர்கள் இணைத்துள்ள ஆவணங்கள், தேச பாதுகாப்புக்கு முக்கியமானவை. ரபேல் விமானங்களின் போர்த்திறன் சம்பந்தப்பட்டவை. அவற்றை மத்திய அரசின் அனுமதியோ, ஒப்புதலோ இல்லாமல் நகல் எடுத்து, சீராய்வு மனுவுடன் இணைத்த சதிகாரர்கள், திருட்டு குற்றம் செய்துள்ளனர்.


இந்த நடவடிக்கையானது நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும், வெளிநாடுகளுடனான நட்புறவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் செயல்பாடு ஆகும். இந்த ஆவணங்களை மத்திய அரசு ரகசியமாக வைத்திருந்தது. ஆனால், மனுதாரர்கள் இவற்றை ரகசியமாக வெளியிட்டதன் மூலம், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விதிமுறைகளுக்கு குந்தகம் விளைவித்து இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த மனு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.