Glad News for Women: NDA-வில் இனி பெண்களும் சேரலாம் - உச்சநீதிமன்றம்
பாலின சமத்துவத்திற்கான மற்றுமொரு முக்கிய நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. NDA வில் பெண்களை சேர்ப்பதற்கான முடிவை ஆயுதப்படைகள் எடுத்துள்ளன
புதுடெல்லி: ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் இது. பாலின சமத்துவத்திற்கான மற்றுமொரு முக்கிய நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்திய ஆயுதப்படையில் நிரந்தர கமிஷனில் சேருவதற்காக, தேசிய பாதுகாப்பு அகாடமியில் (National Defence Academy), இனி பெண்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் கூறியது.
ஆனால், பெண்களை National Defence Academy படிப்புகளில் சேர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க சிறிது கால அவகாசம் தேவை என்று மத்திய அரசு கோரியுள்ளது.
இதுதொடர்பாக செப்டம்பர் 20 -க்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், "NDA யில் பெண்களை சேர்ப்பதற்கான முடிவை ஆயுதப்படைகள் எடுத்ததை அறிந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். சீர்திருத்தங்கள் என்பது ஒரே நாளில் நடக்காது என்பது எங்களுக்குத் தெரியும்... செயல்முறை மற்றும் நடவடிக்கைக்கான காலக்கெடுவை அரசாங்கம் நிர்ணயிக்கும்" என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்தது.
Also Read | நீட் தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
NDA மற்றும் கடற்படை அகாடமி (Naval Academy) தேர்வுகளில் பெண்களை அனுமதிக்கும் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, "ஆயுதப்படைகள் நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன... ஆனால் படைகளில் பாலின சமத்துவத்திற்காக அதிகம் செய்ய வேண்டும். நீதிமன்றங்கள் தலையிடும் வரை காத்திருப்பதை விட பாலின சமத்துவத்தை உறுதி செய்வதில் அவர்கள் ஒரு செயல்திறன்மிக்க அணுகுமுறையை எடுக்க வேண்டும்" என்று நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய சட்ட அமர்வு கூறியது..
NDA சேர்க்கைக்கான தேர்வுகளில் பெண்களும் கலந்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் முக்கிய இடைக்கால உத்தரவு ஒன்றை வெளியிட்ட ஒரே மாதத்திற்குள் இன்றைய விசாரணை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களை என்.டி.ஏவில் சேர்க்க அரசு முடிவெடுத்திருப்பதை, அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி (Additional Solicitor General Aishwarya Bhati) இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். "இந்த செய்தியைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. NDA இல் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள். இது தொடர்பான விரிவான பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வோம். இந்த ஆண்டு தேர்வு நவம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்வுகளில் நடைமுறை மற்றும் உள்கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருக்கிறது. எனவே தற்போதைய நிலையே (status quo) தொடருமாறு அனுமதிக்க வேண்டுகிறோம்".
READ ALSO | அனைத்து வழக்குகளிலும் கைது நடவடிக்கை என்பது கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வுகளுக்கான தேதி மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது. நாட்டின் ஆயுதப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான சேவை வாய்ப்புகள் இருக்கிறது என்று ஆகஸ்ட் 18 அன்று நடந்த விசாரணையின்போது நீதிமன்றம் தெரிவித்தது. இது "மனநிலை பிரச்சனையை" (mindset problem) என்று விமர்சித்த நீதிபதிகள், "நீங்கள் மாறுவது அவசியம்" என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.
நீதித்துறையின் இடைக்கால உத்தரவினால் கட்டாயமாக மாறுவதற்கு பதிலாக, ராணுவம் தனது சொந்த விருப்பத்தின் பேரில் மாறுகிறது என்று நம்புவதாக நீதிமன்றம் தெரிவித்தது. மத்திய அரசின் ஆட்சேர்ப்பு கொள்கையானது பாரபட்சமாக இல்லை என்றும் பெண்கள் விண்ணப்பிக்க பல வழிகள் உள்ளன என்றும் மத்திய அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
NDA தேர்வின் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆண்களுக்கு தற்போது ஆயுதப்படைகளில் நிரந்தர கமிஷன் வழங்கப்படுகிறது; ஆனால், பெண்கள், முதலில் குறுகியகால சேவை கமிஷன் (Short Service Commission) அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள். பிறகு, அந்த காலகட்டம் முடிந்தபிறகு நிரந்தர கமிஷனுக்கு (permanent commission) பரிசீலிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | வரலாற்றில் செப்டம்பர் 8ம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR