பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாரதீய ஜனதா அரசியல் செய்கிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக சாடினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து வருபவர். பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலுக்கு கூட அவர் ராணுவத்தை மட்டுமே பாராட்டி இருந்தார். இந்நிலையில், நேற்று அவர் முதல்முறையாக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார்.


உரி தாக்குதலில் 19 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய ராணுவம் பழிவாங்கி உள்ளது. பிரதமருடன் நூற்றுக்கும் மேற்பட்ட விஷயங்களில் எனக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், இந்த விஷயத்தில் அவர் காட்டிய துணிச்சலுக்காக அவரை நான் வணங்குகிறேன். தற்போது, பாகிஸ்தான் சர்வதேச அரங்கில் இந்தியாவின் நற்பெயரை கெடுக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதன் முகமூடியை பிரதமர் கிழித்தெறிய வேண்டும். நாடே அவருக்கு துணையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


அதேவேளையில், பாகிஸ்தான் சர்வதேச ஊடகங்களில் பிரச்சாரம் செய்வதற்கு மத்திய அரசும் பதிலடி கொடுக்க வேண்டும் என்று கோரி இருந்தார். இதற்கு பாரதீய ஜனதா அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்து இருந்தது. 


இந்த நிலையில் விமர்சனத்திற்கு பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால்:- நான் பிரதமருக்கு ஆதரவு அளிக்கிறேன். ராணுவத்தை பாராட்டுகிறேன். பாகிஸ்தான் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது என்று மட்டுமே நான் கூறினேன். சர்ஜிக்கல் தாக்குதல் நடைபெற்றது என்பதை நாம் அனைவரும் நம்புகிறோம். பாகிஸ்தான் கூறுவதை வைத்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இதற்கு பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று மட்டும் தான் நான் கோரிக்கை வைத்தேன். பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நான் கோரினால் அதற்காக ஏன் பாரதீய ஜனதா அச்சப்பட வேண்டும்? பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்திற்கு நாம் அனைவரும் பதிலடி கொடுக்க வேண்டும். எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நாம் அனைவரும் இந்த விவகாரத்தில் பிரதமரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்” என அவர் கூறினார்.