Year Ender 2024: இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு எது? ஸ்விக்கியின் சுவாரஸ்ய தகவல்கள்!
Year Ender 2024, Swiggy Orders: 2024ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்களால் அதிக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் உள்பட பல்வேறு தகவல்களை ஸ்விக்கி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதனை விரிவாக இங்கு காணலாம்.
Year Ender 2024, Swiggy Orders: நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஸ்மார்ட்போன் பயன்பாடு நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்று சேர்ந்துள்ளது. இதனால், உணவு டெலிவரி சேவைகள் முன்னணி நகரங்களில் மட்டுமின்றி இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களையும் பெரியளவில் சென்று சேர்ந்திருக்கிறது எனலாம். தொடர்ந்து உணவு டெலிவரி சேவைகள் இந்தியாவில் விரிவடைந்து வருகிறது என்றும் கூறலாம்.
அந்த வகையில், ஸ்விக்கி நிறுவனம் உணவு டெலிவரி துறையில் இந்தியாவில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டில் தங்கள் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் வாங்கிய உணவுகள் குறித்த புள்ளிவிவரங்கள், தகவல்கள் அடங்கிய வருடாந்திர அறிக்கை ஒன்றை ஸ்விக்கி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 22ஆம் தேதி வரையிலான தரவுகளை வைத்து இந்த புள்ளிவிவரங்களை வழங்கியிருப்பதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து முதலிடத்தில் பிரியாணி
கடந்தாண்டை போலவே, இந்தாண்டும் ஸ்விக்கி செயலி மூலம் அதிகமான வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த உணவுகள் பட்டியலில் பிரியாணி (Biryani) முதலிடம் பிடித்துள்ளது. இந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் 8.3 கோடி பிரியாணி ஆர்டர்கள் வந்துள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. ஏறத்தாழ நாடு முழுவதும் ஒரு நிமிடத்திற்கு 158 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுவதாகவும், சுமார் நொடிக்கு 2 ஆர்டர்கள் வருவதாகவும் ஸ்விக்கி கணக்கிட்டுள்ளது. பிரியாணிக்கு அடுத்த இடத்தில் தோசை உள்ளது. இந்தாண்டு 2.3 கோடி தோசை ஆர்டர்கள் மட்டும் வந்துள்ளதாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
இது மட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகள் குறித்து ஸ்விக்கி தெரிவித்துள்ளது. பிரியாணியில் பலருக்கும் பிடித்தது சிக்கன் பிரியாணிதான் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தாண்டு 4.9 கோடி சிக்கன் பிரியாணி ஆர்டர்கள் ஸ்விக்கிக்கு வந்துள்ளது. பெரும்பாலும் இந்த பிரியாணிகளின் ஆர்டர்கள் தென் மாநிலங்களில் இருந்துதான் வந்துள்ளதாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
முந்தும் தென் மாநிலங்கள்
2024ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் இருந்து 97 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் ஹைதராபாத்தில் இருந்தும், 77 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் பெங்களூருவில் இருந்தும், 46 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் சென்னையில் இருந்தும் வந்துள்ளது. அதாவது இந்த மூன்று நகரங்கள்தான் பிரியாணி ஆர்டர்களில் டாப் 3 இடங்களை பிடித்துள்ளன. மொத்தம் வந்த 8.3 கோடி பிரியாணி ஆர்டர்களில் இந்த மூன்று நகரங்களில் இருந்தே 2.20 கோடி ஆர்டர்கள் வந்துள்ளதை காண முடிகிறது.
நள்ளிரவு உணவு ஆர்டர்கள்
அதேபோல், நள்ளிரவு 12 மணி முதல் 2 மணிவரையிலான காலகட்டத்தில் வாடிக்கையாளர்களால் அதிக ஆர்டர் செய்யப்படும் உணவுகளிலும் பிரியாணி முன்னணியில் உள்ளது. ஆனால், இந்த பட்டியலில் பிரியாணிக்கு இரண்டாம் இடம்தான் கிடைத்துள்ளது. முதலிடத்தில் சிக்கன் பர்கர் உள்ளது. ஸ்விக்கி உங்கள் வீட்டுக்கு மட்டுமின்றி ரயில்களில் உங்களின் இருக்கைக்கே உணவுகளை நேரடியாக வந்து டெலிவரி செய்து வருகிறது. இதற்காக ஸ்விக்கி, இந்தியன் ரயில்வே உடன் கைக்கோர்த்துள்ளது. அந்த வகையில், ரயில் பயணிகளால் அதிக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் பட்டியலிலும் பிரியாணி முதலிடம் பெற்றுள்ளது.
முன்னதாக, இந்தாண்டு ரம்ஜான் பண்டிகை அன்று இந்தியா முழுவதும் சுமார் 60 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டதாக ஸ்விக்கி அப்போதே தெரிவித்திருந்தது. அதிலும் ஹைதராபாத்தான் முதலிடம் பிடித்தது. ஹைதாராபாத் நகரில் இருந்து ரம்ஜான் அன்று 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரியாணி ஆர்டர்களும், 5.3 லட்ச ஹலீம் ஆர்டர்களும் வந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் முதல் பிரியாணி ஆர்டர்
ஸ்விக்கி நிறுவனம் இந்த புள்ளிவிவரங்கள், தகவல்கள் அடங்கிய அறிக்கையில் பல சுவாரஸ்ய விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அன்று காலை 4.01 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாகவும், அதுதான் இந்தாண்டில் இந்தியாவின் முதல் பிரியாணி ஆர்டர் என்றும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | குளிர்காலத்தில் காலையில் சீக்கிரம் எழுந்திருக்கணுமா? இந்த 5 விஷயங்கள் உதவும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ