அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை தோல்வி; வங்கி தொழிற்சங்கங்கள் இணைப்புக்கு எதிராக இன்று 24 மணி நேர வேலைநிறுத்தத்தை அழைப்பு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், “10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக குறைக்கப்படும்” என்று அறிவித்தார். இதனால் 6 வங்கிகள் குறிப்பிட்ட 4 வங்கிகளுடன் இணைக்கப்படுகின்றன. இந்த வங்கிகள் இணைப்பு முயற்சிக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மற்றும் சீரமைப்பைக் கைவிட வேண்டும், வாராக் கடனை தீவிரமாக வசூலிப்பதோடு, கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அபராதக் கட்டணம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை துன்புறுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


மத்திய அரசு தலைமை தொழிலாளர் நல ஆணையர், இந்திய வங்கிகள் சங்க நிர்வாகிகள், மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்ற கூட்டம் தோல்வியில் முடிந்ததால் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. தமிழகத்தில் 35 ஆயிரம் பேர் உள்பட அகில இந்திய அளவில் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்பதால், வங்கி சேவைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 


நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தத்தில் 5 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கிறார்கள். ஆனாலும் வங்கி அதிகாரிகளும், தனியார் வங்கிகளும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையை பொறுத்தவரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று காலை 10 மணிக்கு வங்கி ஊழியர்களின் பேரணி நடைபெறுகிறது. இதேபோல் மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டங்கள் நடக்கிறது.