23-வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம்!!
தமிழக விவசாயிகள் 23-வது நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பிற மாநிலத்தின் விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் சுமார் 250 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 21 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்தும், சவம் போல் சாலையில் படுத்தும், தூக்குக் கயிறு கழுத்தில் மாட்டியும், அரை மொட்டை அடித்தும் பல்வேறு வகைகளில் விவசாயிகள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நேற்று விவசாயிகள் போராட்டக் குழுவைச் சேர்ந்த சிலர் தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தியும் அவர்களது கோரிக்கைகள் இன்னும் நிறைவேறவில்லை. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.
கடந்த 23 நாள்களாக போராடி வரும் எங்களை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எனவே போராடியே எங்கள் உயிர் போவதற்கு முன்னர் மோடிக்கு நல்ல புத்தியை ஆண்டவன் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.