மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் தரப்பு, மானநஷ்ட வழக்குப்பதிவு!
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது!
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது!
கோடநாடு கொலை - கொள்ளை விவகாரம் குறித்து புலனாய்வு செய்து வீடியோ வெளியிட்ட முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலிடன், கோடநாடு கொள்ளை தொடர்பாக சயன், மனோஜ் வீடியோ வாக்குமூலம் அளித்துள்ளனர். கோடநாடு சம்பவத்தின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக இந்த வீடியோவில் பேசியுள்ள சயன் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக இந்த வீடியோ தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, இன்று சென்னை வந்த மேத்யூ, கொடநாடு கொள்ளை மற்றும் அதன்பின் நடந்த கொலைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுப்பது தொடர்பாகவும், முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும், சென்னையில் வக்கீல்களை சந்திக்க வந்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் சயான், மனோஜ் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது, என் மீதும் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்., தமிழக அரசு மீது நான் குற்றம் சாட்டவில்லை, எடப்பாடி பழனிசாமி மீதுதான் குற்றம் சாட்டுகிறேன். அவர் மீது எனக்கு எந்த தனிப்பட்ட விரோதம் இல்லை. கொடநாடு தொடர்பான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். ஆனால் என்னிடம் மேலும் ஆதாரங்கள் உள்ளன. அதை சரியான நேரத்தில் வெளியிடுவேன். இவ்விவகாரத்தை சட்டப்படி நீதிமன்றத்திலும் சந்திக்க தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் விளைவிப்பதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி தரப்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில், 1.10 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.