விமான நிலையத்தில் தகராறு: திவாகர் ரெட்டி பயணம் செய்ய தடை
விசாகபட்டணம் விமானப் பணியாளர்களிடம் தகராறு செய்ததாக தெலுங்குதேசம் கட்சி எம்.பி திவாகருக்கு நான்கு விமான நிறுவனங்கள் தடை விதித்துள்ளன.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் விமானம் நிலையத்தில் இருந்து ஐதராபாத் செல்ல இன்டிகோ விமானத்தில் ஏற தெலுங்குதேசம் கட்சி எம்.பி திவாகர் ரெட்டி வந்தார். ஆனால் விமான நிறுவன ஊழியர், நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள், மேலும் விமானம் புறப்பட தயாராக இருந்ததால், இந்த விமானத்தில் பயணம் செய்ய முடியாது என கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் இன்டிகோ விமான டிக்கெட் கவுண்டருக்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஊழியருடன் வாய்த்தகராறில் ஈடுபட்டு உள்ளார். மேலும் மேஜை, தட்டச்சு எந்திரத்தை சேதப்படுத்தியுள்ளார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
தெலுங்கு தேசம் எம்.பி.யின் நடவடிக்கையை அடுத்து ‘எங்கள் ஊழியரிடம் ஆக்ரோஷத்துடனும், தகாத முறையிலும் நடந்துகொண்ட திவாகர் ரெட்டி எம்.பி.யை இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கமாட்டோம்’ என்று இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், கோஏர், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அவருக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டனர்.