பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உடனான சந்திப்பிற்கு பின்னர் இன்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்களை ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் சந்தித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லக்னோவில் நிகழ்ந்த இச்சந்திப்பிற்கு பின்னர் அகிலேஷ் மற்றும் தேஜஸ்வி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஆளும் பாஜக 10% இட ஒதுக்கீடு மூலம் வலியவர்களுக்கான உரிமைகளை ஒடுக்க முயல்கிறது என குற்றம்சாட்டினார். RSS கோட்பாடுகளை பின்பற்றும் பாஜக-வினர், RSS தலைவர் மோகன் பஹவத் வாக்குகளை நிறைவேற்ற முயன்று வருகின்றனர் எனவும் குற்றம்சாட்டினார். மேலும், ஆளும் பாஜக-வினர் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு பதிலாக RSS கோட்பாடுகளை திணிக்க முயற்சி செய்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டனர்.


சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியை குறித்து பேசிய தலைவர்கள்., மக்கள் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியை வரவேற்கிறார்கள், உ.பி மற்றும் பிஹாரில் பாஜக-வால் இனி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என குறிப்பிட்டனர்.


115-118 என்ற இலக்குடன் உத்திர பிரதேசத்தில் களமிறங்கும் பாஜக-வால் இம்முறை சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியை மீறி 100 இடங்களை கூட கைப்பற்ற இயலாது எனவும் தெரிவித்தனர்.


முன்னதாக உத்திரபிரதேசத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பின்படி, வரும் மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளன.


காங்கிரஸை கூட்டணியில் சேர்க்காத போதிலும், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பது என அகிலேஷும், மாயாவதியும் முடிவு செய்துள்ளனர். எனினும் இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.


சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி உத்திரபிரதேச அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என கருதப்படும் நிலையில், இதேபோன்று பிஹாரில் பாஜக-வுக்கு எதிராக வலிமையான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகனும், ராஷ்ட்ரீய ஜனதாதள மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவ் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் தலைவர்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அவர்களை லக்னோவில் தேஜஸ்வி சந்தித்து பேசினார்.