தெலங்கானா அமைச்சரவையில் விரைவில் 2 பெண் எம்எல்ஏ.க்கள் சேர்க்கப்படுவார்கள் என அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த டிசம்பர் மாதம் தெலங்கானா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி, ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர ராவ், மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அத்தருணத்தின் போது ஒருவர் மட்டுமே அமைச்சராகப் பொறுப்பேற்றார்.


இந்நிலையில் தேர்தல் முடிந்து 66 நாட்கள் கழித்து அமைச்சரவையை முதல்வர் கடந்த செவ்வாய்க்கிழமை விரிவுபடுத்தினார். விரிவுபடுத்தப்பட்ட அமைச்சரவையில் 10 பேர் அமைச்சர்களாகப் பொருப்பேற்றுக் கொண்டனர். இவர்களில் பெண் அமைச்சர்கள் எவரும் இடம்பெறவில்லை.


முன்னதாக கடந்த 2014-ஆம் ஆண்டு சந்திரசேகர ராவ் முதல்முறையாக ஆட்சியை பிடித்தபோதும் இவரது அமைச்சரவையில் பெண்கள் எம்எல்ஏ-க்கள் இடம்பெறவில்லை.


இதனால் சந்திரசேகர ராவ் பெண்களுக்கு எதிரானவர் என காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின. 
இந்நிலையில் தெலங்கானா சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் பேசும்போது, “தெலங்கானா அமைச்சரவையில் விரைவில் 2 பெண்கள் சேர்க்கப்படுவர்” என அறிவித்தார்.


இதன் மூலம் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக டிஆர்எஸ் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.