அசாம் பயங்கரவாத தாக்குதலில் 14 பேர் பலி; பிரதமர் கண்டனம்
அசாமின் கோக்ராஜ்கர் மாவட்டத்தில் மக்கள் நெரிசல் மிகுந்த வார சந்தையில் பயங்கரவாதிகள் திடீரென பொதுமக்களை குறிவைத்து கையெறி குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு கூடுதல் படை விரைந்து உள்ளது. பயங்கரவாதிகளில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் நீண்ட காலமாக போடோ தீவிரவாதிகள் அச்சுறுத்தல் நிலவி வரும்நிலையில், இத்தாக்குதலை முன்னெடுத்தவர்கள் போடோ தீவிரவாதியாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பேசுகையில், இப்பிரச்சனையை கருத்தில் எடுத்துக் கொண்டு உள்ளோம். அசாமில் அமைதியை சீர்குலைக்க அனுமதிக்கமாட்டோம், என்று கூறிஉள்ளார்.
பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில்:- கோக்ராஜ்கர் தாக்குதலினால் வருத்தம் அடைந்தேன். நாங்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். என்னுடைய எண்ணம் மற்றும் பிரார்த்தனை உயிரிழந்தோர் குடும்பத்துடனும், காயம் அடைந்தோருடனும் உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அசாம் அரசுடன் தொடர்பில் உள்ளது, அங்குள்ள நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது, என்று குறிப்பிட்டு உள்ளார்.