துன்பமான நேரத்தில் J&K மக்களுக்கு ஆதரவாக பேசிய ஸ்டாலினுக்கு நன்றி: மெகபூபா முப்தி
காஷ்மீரிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தற்காக திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் அரசியல் தலைவர் மெகபூபா முப்தி.
சென்னை: ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் கலந்தாலோசிக்காமல், 370 வது பிரிவை நீக்கி ஜம்மு-காஷ்மீரை இரண்டாக பிரிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இது ஜனநாயக படுகொலை எனக்கூறிய திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னால் முதல்வர் மெகபூபா முப்தி.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கூடிதலாக 35,000 பேர் பாதுகாப்பு பணிக்காக அனுப்பட்டு உள்ளனர். எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க நேற்று நள்ளிரவு முதல் முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மேலும் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. இணையதள சேவைகள், செல்போன் சேவைகள் முடக்கப்பட்டுவிட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை நீக்கப்படுவதாக அறிவித்தார். ஜம்மு-காஷ்மீர் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபை கூடிய தனி யூனியன் பிரதேசமாக இருக்கும். மற்றொன்று லடாக் சட்டசபை இல்லாமல் ஒரு யூனியன் பிரதேசமாக இருக்கும் எனவும் அறிவித்தார். இதற்கான ஒப்புதலை குடியரசு தலைர் வழங்கியுள்ளார்.
மத்திய அரசின் இந்த முடிவுகள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதல் இல்லாமல் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜம்மு-காஷ்மீரை இரண்டாக பிரிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் கலந்தாலோசிக்காமல், 370 வது பிரிவு பறிக்கப்பட்டுள்ளது. இந்த ஜனநாயக படுகொலைக்கு அதிமுக துணை போயிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இனிமேல் அதிமுக என்ற பெயரை மாற்றி அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என வைத்து கொண்டால் நன்றாக இருக்கும். காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வரும் வரை குடியரசுத் தலைவர் இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தநிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்துக்கு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னால் முதல்வர் மெகபூபா முப்தி நன்றி தெரிவித்துள்ளார். அதுக்குறித்து தந்து ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியது, நன்றி ஸ்டாலின் அவர்களே...!! துன்பகரமான நேரத்தில் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக கருத்து கூறியமைக்கு நன்றி என ட்வீட் செய்துள்ளார்.