திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி, இவரது மகன் சரத்பிரபு. இவர், கோவை மருத்துவக் கல்லூரியில் MBBS முடித்து பின்னர் டெல்லி AIIMS மருத்துவக் கல்லூரியில் MS பட்டமேற்படிப்பை படித்துவந்தார். முதலாம் ஆண்டு பயின்றுவரும் அவர் நேற்று முன்தினம் கல்லூரி விடுதியில் உள்ள கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர்,அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு நேற்று மாலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


இதையடுத்து, நேற்று இரவு சரத் பிரபு உடல் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.


இன்று காலை அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அப்போது, உறவினர், நண்பர்கள், மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.


இறுதி ஊர்வலத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். சரத்பிரபுவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க இறுதி காரியங்களை செய்து முடித்தனர். முன்னதாக, சரத்பிரபு தற்கொலை செய்துகொண்டார் என்று எண்ணிய நிலையில் அவரது மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும்,சரத்பிரபுவின் மரணத்திற்கான காரணம் குறித்து மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.