பூரம் விழாவில் வாணவேடிக்கை நடத்த அனுமதி
கொல்லம் மாவட்டம் புட்டிங்கலில் உள்ள அம்மன் கோவிலில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த விழாவின்போது வாண வேடிக்கை நடத்தப்பட்டது. அப்போது விபத்து ஏற்பட்டு 108 பக்தர்கள் பலியானார்கள்.
இதையடுத்து கேரளாவில் உள்ள கோவில்களில் வாண வேடிக்கை நடத்த அரசு தடை விதித்தது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் திருச்சூர் பூரம் விழாவில் வாண வேடிக்கை நடத்த கோவில் நிர்வாகத்தினர் மத்திய வெடிபொருள் துறையிடம் அனுமதி கேட்டனர்.
கேரளாவில் திருச்சூர் பூரம் விழா பிரசித்திப்பெற்ற விழாவாகும். இதன் சிறப்பே இக்கோவிலில் நடைபெறும் போட்டி வாண வேடிக்கையும், யானைகளின் ஊர்வலமும் ஆகும்.
இந்த ஆண்டு நடைபெறும் பூரம் விழாவில் போட்டி வாண வேடிக்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து நாளை கோவிலில் சாதாரண வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. பிரதான போட்டி வாணவேடிக்கை வருகிற 6-ம்தேதி நடைபெறுகிறது.