கடனாளிகள் வெளிநாடு தப்புவதை தடுக்க நடவடிக்கை புதிய நடவடிக்கை!
பெரும் கடனாளிகள் வெளிநாடு தப்புவதை தடுக்க புதிய நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
வங்கியில் ரூ.50 கோடிக்கு மேல் கடன் வாங்கி, வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதை தடுக்கும்வகையில், அவர்களது பாஸ்போர்ட் விவரங்களை கேட்டுப்பெற வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் காலக் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.
விஜய் மல்லையா, நிரவ் மோடி என்று பல பெரும் தொழில் அதிபர்கள் வங்கிகளில் கோடிக் கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு, வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடுகின்றனர். இவர்களிடமிருந்து பணத்தை திரும்பப் பெற முடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன.
இந்தநிலையில், இப்படி வங்கிகளில் கோடிக் கணக்கில் பணம் கடனாக வாங்கியவர்கள் யார், அவர்களுடைய பாஸ்போர்ட் விவரங்கள் உள்ளிட்ட விவரங்களை திரட்டும்படி வங்கிக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், ''ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெற்ற அனைவரது பாஸ்போர்ட் விவரங்களையும் 45 நாட்களுக்குள் கேட்டுப்பெற வேண்டும். ஒருவேளை, அவர்களிடம் பாஸ்போர்ட் இல்லாவிட்டால், ‘பாஸ்போர்ட் இல்லை‘ என்று பிரகடனப்படுத்தும் சான்றிதழை கேட்டுப்பெற வேண்டும்.
பாஸ்போர்ட் விவரங்களை குறிப்பிடுவதற்காக, கடன் விண்ணப்ப படிவத்தில் அதற்கென பிரத்யேக பகுதியை அச்சிட வேண்டும். பாஸ்போர்ட் விவரங்களை பெற்றால்தான், உரிய அதிகாரிகளிடம் சொல்லி, அந்த கடனாளிகள் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க முடியும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வங்கிகளில் பெரும் தொகையை கடனாக வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து விற்பதற்கான மசோதாவுக்கு கடந்த வாரம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இதனைத் தொடர்ந்து இத்தகைய உத்தரவை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.