மாநிலங்களவையில் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, மகப்பேறு விடுப்பு சட்டத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. 


புதிய மசோதா மூலம் தனியார் நிறுவனங்கள் உள்பட அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் கர்ப்பிணிகளுக்கு தற்போது ஊதியத்துடன் அளிக்கப்பட்டு வரும் மகப்பேறு விடுப்பு 3 மாதத்திலிருந்து 6 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பச்சிளங் குழந்தைகளை தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு 3 மாத விடுப்பு அளிப்பது தொடர்பான அம்சங்கள், தற்போதுள்ள மகப்பேறு சட்டத்திருத்தத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தில் குழந்தைகள் காப்பகம் அமைப்பது போன்றவற்றை கட்டாயமாக்குவது தொடர்பான அம்சங்கள் மகப்பேறு சட்டத்திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.