இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலை தணிக்க நடுநிலையாக செயல்பட நாங்கள் தயார் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உரி ராணுவ முகாம் மற்றும் பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி அதற்கான தகுந்த ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இதனால் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானை உலக அரங்கில் தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்து பூடான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தன.


இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ மந்திரி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுக்கையில் கூறியதாவது:- எந்த நாடும் எங்கள் மீது போரை திணித்தால் அந்த நாட்டை நாங்கள் அழிப்போம். தேவைப்பட்டால் அணுகுண்டை பயன்படுத்தி இந்தியாவை அழிப்போம் என்று மிரட்டல் விடுத்தார்ர்.


ராணுவ அதிரடிப்பிரிவு கமாண்டோக்கள் 28-ம் தேதி நள்ளிரவில் பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து துல்லியமான தாக்குதல்களை அதிரடியாக நடத்தினர். இதில் 38 பயங்கரவாதிகளும், பாகிஸ்தான் சிப்பாய்கள் 2 பேரும் கொன்று குவிக்கப்பட்டனர். 7 பயங்கரவாத முகாம்கள் நிர்மூலமாக்கப்பட்டன. இந்த தாக்குதல்களுக்கு பழிவாங்கும் விதத்தில் நமது நாட்டின் முக்கிய நகரங்களில் நாசவேலைகளில் ஈடுபடுமாறு பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு முகமைகள் உத்தரவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினருடன், ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது.


இதனால்,இரு நாடுகளின் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளிலும் பதட்டமான சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில் அணு ஆயுத பலம் கொண்ட இருநாடுகளுக்கும் இடையேயான பதட்டத்தை தணிக்க மத்தியஸ்தராக செயல்பட தயராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். 


இது குறித்து ஐநா பொதுச்செயலாளர் பான் கீ முன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்தாவது:-  செப்டம்பர் 18-ம் தேதி நடைபெற்ற உரி தாக்குதலுக்கு பிறகு இருநாடுகளிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவது கவலை அளிக்கிறது. இருநடுகளும் ஒப்புக்கொண்டால், காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மத்தியஸ்தராக செயல்பட ஐநா அதிகாரிகள் தயாராக உள்ளனர். இருநாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும். பதட்டத்தை தணிக்க தேவையான உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.