தமிழகம், புதுச்சேரியின் சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம், புதுச்சேரியின் சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையும், காற்றுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல், அதை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, சேவூர், காட்டுகாநல்லூர், வண்ணாங்குளம் பகுதிகளில் கனமழை பெய்தது. கண்ணமங்கலத்தில் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மழை பெய்தது. காட்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. பலத்த மழையால், சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.


கொடைக்கானலில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனிடையே குமரி மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


திருச்சி, பெரம்பலூர், மதுரை, சேலம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.