வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாள் வருகிற 31-ம் தேதி. இதுவரை 87 கோடி வங்கிகணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டதாக ஆதார் நிறுவனம் தகவல் தெரிவித்திருந்தது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆதார் அட்டைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. கியாஸ் மானியம் உள்பட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் வங்கி கணக்கு, ‘பான்கார்டு’ செல்போன் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாள் இம்மாதம் (மார்ச்) 31-ம் தேதி ஆகும். மேலும் செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கும் இதுவே கடைசி நாள் ஆகும்.


இந்நிலையில், மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியதாவது, வங்கி கணக்கு உள்ளிட்டவையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு ஏற்கனவே நீட்டித்தது. தேவைப்பட்டால் மறுபடியும் நீட்டிக்கும் என்று அவர் தெரிவித்தார். 


ஆதார் எண்ணை வங்கி கணக்கு உள்ளிட்டவையுடன் இணைக்கச் சொல்வது மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மனுதாரர் தரப்பில் இதுவரை 3 வழக்கறிஞர்கள் வாதாடியுள்ளனர். மேலும் 5 வழக்கறிஞர்கள் இனி வாதாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.