ஜம்மு காஷ்மீர் மசோதா: பாஜவுக்கு ஆதரவளித்த மம்தா மற்றும் அகிலேஷ்
காஷ்மீர் மாநிலத்தில் அடுத்த ஆறு மாதத்திற்கு ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தும் மசோதாவுக்கு ஆதரவு அளித்த திரிணாமுல் காங்கிரஸ் மற்றும்சமாஜ்வாதி கட்சிகள்.
புதுடில்லி: காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி மற்றும் இடஒதுக்கீட்டை திருத்த பரிந்துரை மசோதாவுக்கு ஆதரவு அளித்த திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள்.
கடந்த வெள்ளிகிழமை (ஜூன் 28) மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நிலைமை குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கினார்.
மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சபையில் இரண்டு திட்டங்களை முன்வைத்தார். ஒன்று ஜம்மு-காஷ்மீரில் தற்போதைய ஜனாதிபதி ஆட்சியை அடுத்த 6 மாதங்களுக்கு அதிகரிக்க அவர் பரிந்துரைத்தார். அதற்க்கான தீர்மானத்தை முன்வைத்தார். அப்பொழுது ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை அகற்ற எங்கள் அரசாங்கம் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் எனவும் அமித்ஷா கூறினார்.
இரண்டாவது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீட்டை திருத்த பரிந்துரை செய்துள்ளார். இடஒதுக்கீடு திருத்தத்திற்கான முன்மொழிவை முன்வைக்கும் போது அது மாநில மக்களுக்கு பயனளிக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். சர்வதேச எல்லையைச் சுற்றியுள்ள மக்கள் இடஒதுக்கீட்டின் பலனையும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இடஒதுக்கீட்டில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது எனவும் கூறினார்.
மக்களவையில் பாஜகவுக்கு போதிய பெரும்பான்மை இருப்பதால், இந்த இரண்டு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், இன்று இந்த இரண்டு மசோதாவும் மாநிலங்களவை இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். ஆனால் ராஜ்யசபாவில் பா.ஜ.க-விற்கு போதிய பெரும்பான்மை இல்லாததால், இந்த மசோதா நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் காஷ்மீர் மாநிலம் தொடர்பாக பா.ஜ.க கொண்டு வந்துள்ள 2 மசோதாக்களுக்கு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
பாஜகவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் மம்தாவும், அகிலேசும் ஆதரவு அளித்து இருப்பது வியப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.