மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து இன்று மாலை 5.30க்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன் முதலாக கடந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டது. தற்போது இந்த தேர்வை வருகிற மே மாதம் 6-ம் தேதி மத்திய கல்வி வாரியம் சிபிஎஸ்இ நடத்துகிறது.


இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கிற மாணவ, மாணவிகள் ஆதார் எண் அல்லது ஆதார் பெறுவதற்கான பதிவு எண் குறிப்பிட வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கி சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டது.


ஆனால் இதற்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வு உள்ளிட்ட அகில இந்திய தேர்வுகள் அனைத்துக்கும் ஆதார் எண் கட்டாயம் இல்லை என உத்தரவிட்டது.


ஆதாருக்கு பதிலாக மாணவ, மாணவிகள்  ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வங்கி கணக்கு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றையும் பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 


மேலும் இதில் எதை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கிறபோது பயன்படுத்துகிறார்களோ, அந்த அடையாள ஆவணத்தை தேர்வு எழுதும் வரும் மாணவ, மாணவிகள் காட்ட வேண்டும் என மத்திய கல்வி வாரியம் சிபிஎஸ்இ  தெரிவித்து உள்ளது.


இந்நிலையில், நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க (மார்ச் 9-ம் தேதி) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட பட்டுள்ளதாக மத்திய கல்வி வாரியம் சிபிஎஸ்இ ஏற்கனவே, ஒரு அறிக்கையில் தெரிவித்து இருந்தது.


அதன்படி, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று திங்கள்கிழமை (மார்ச் 12) மாலை 5.30 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை இணையதளத்தில் நாளை செவ்வாய்கிழமை (மார்ச் 13) இரவு 11 மணிக்குள் செலுத்த வேண்டும்.


மேலும் விண்ணப்பத்தில் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை ஆன்லைனிலேயே மார்ச் 15 முதல் 17-ஆம் தேதி வரை செய்துகொள்ளலாம்.


இதுவரை விண்ணப்பிக்காத விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்கலாம்.