புதுடெல்லி: பெட்ரோல் பங்க், விமான டிக்கெட்டுகளுக்கு பழைய 500 ரூபாய் நோட்டுகளை நாளை முதல் பயன்படுத்த முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்திருந்தார், இந்நிலையில் இந்த நோட்டுகளை மாற்றுவதற்காக பொது மக்கள் வங்கிகளில் மாற்றி வருகின்றனர். 


பெட்ரோல் பங்க், பஸ், ரெயில், விமான போக்குவரத்துக்கான டிக்கெட்டுகள், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அரசின் கட்டணங்கள், செல்போன் கட்டணம், பள்ளி கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு இந்த நோட்டுகளை பயன்படுத்தலாம் என மத்திய அரசால் கூறப்பட்டிருந்தது.


இதற்கான கால அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு இறுதியாக கடந்த மாதம் 24-ம் தேதி வரை இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என கூறப்பட்டு இருந்தது. பின்னர் இது வருகிற 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதுடன், மேற்கூறப்பட்ட தேவைகளுக்கு 500 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.


பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பழைய நோட்டுகளை மாற்றும் கால அவகாசத்தை இன்றுடன் முடித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பெட்ரோல், டீசல், கியாஸ் விற்பனை நிலையங்களில் நாளைமுதல் பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என மத்திய அரசு அறிவித்தது.


மேலும் கவுண்ட்டர்களில் எடுக்கப்படும் விமான டிக்கெட்டுகளுக்கும், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் நாளை முதல் பழைய 500 ரூபாய்  நோட்டுகளை பயன்படுத்த முடியாது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.


முன்னதாக நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்திருந்த மத்திய அரசு, இதற்காக நாளை முதல் பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் கூறியிருந்தது. ஆனால் இந்த அறிவிப்பும் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.


ஆனால் ரெயில் டிக்கெட் கவுண்ட்டர்கள், அரசு மற்றும் பொதுத்துறை பஸ் டிக்கெட் கவுண்ட்டர்கள், தண்ணீர், மின்சார கட்டணங்கள் உள்ளிட்ட ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேவைகளுக்கு வருகிற 15-ம் தேதி வரை பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.