மத்திய மந்திரிகளின் சபையை மாற்றி அமைப்பது குறித்து கடந்த சில வாரங்களாகவே பிரதமர் மோடி தீவிர ஆலோசனை நடத்தினார். கடந்த 30-ம் தேதி மோடி, இது தொடர்பாக மத்திய மந்திரி  சபை கூட்டத்தில் விவாதிக்கவும் செய்தார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் 2 ஆண்டு கால ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள், இவற்றில் மத்திய மந்திரிகளின் பங்களிப்பு,  தொகுதி மேம்பாட்டு நிதியை எத்தனைபேர் சரியாக பயன்படுத்தி, வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி உள்ளனர் என்பது பற்றியும் கட்சியின் எதிர்கால நலன் குறித்தும் அவர் விரிவாக ஆய்வு செய்தார்.இதில் திருப்திகரமாக செயல்படாத மந்திரிகளை பதவியில் இருந்து நீக்கவும், திறமையாக செயல்படும் மந்திரிகளுக்கு கேபினட் அந்தஸ்து அளிக்கவும் மோடி முடிவு செய்து இருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை 11 மணிக்கு மாற்றி அமைக்கப்படுகிறது. பிரதமர் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத்தை தொடங்கும் முன்பாகவே தனது மந்திரிசபையை மாற்றி அமைக்கிறார். மத்திய சட்ட மந்திரியாக உள்ள சதானந்த கவுடா வேறு துறைக்கு மாற்றப்படலாம் என்றும் அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்  என்றும் தகவல்கள் தெரிவித்து உள்ளன. புதிய அமைச்சரவையில் சிவசேனாவின் பங்கு இருக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 


மந்திரி சபை மாற்றியமைக்கப்பட்டாலும், முதல் 4 நிலையில் உள்ள உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதிமந்திரி அருண்ஜெட்லி, வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் ஆகிய நால்வர் வகிக்கும் பதவிகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. அடுத்த ஆண்டு பஞ்சாப், கோவா, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலங்களில் ஆட்சியை பா.ஜனதா கூட்டணி கைப்பற்ற குறிவைக்கும் விதமாகவும் மத்திய மந்திரிசபை மாற்றம் இருக்கும் என்று கருதப்படுகிறது.


பிரதமர் மோடியின் மந்திரி சபையில் தற்போது பிரதமர் உள்பட 66 பேர் உள்ளனர். அரசியலமைப்பின் படி மந்திரிசபையில் 82 பேர் இடம்பெறலாம்.