இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
புதுடெல்லி: கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"சுகாதார அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பார்கள்"என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுவதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூன் 29 முதல் நல்லெண்ண நடவடிக்கையாக கர்த்தார்பூர் வழித்தடத்தை மீண்டும் தொடங்க பாகிஸ்தான் முன்மொழிந்திருப்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
Also Read | கர்த்தார்பூர் வழித்தடத்தை இரண்டு நாள் நோட்டீசில் திறக்கும் பாகிஸ்தானின் நோக்கம் என்ன?
சீக்கிய யாத்ரீகர்களுக்கான கர்த்தார்பூர் நடைபாதையை இரண்டு நாள் நோட்டீசில் திறக்கும் பாகிஸ்தானின் நோக்கம் குறித்து இந்தியா ஏற்கனவே கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு அண்டை நாடுகளுக்கிடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, கர்த்தார்பூர் நடைபாதை மீண்டும் திறக்கப்படுவது குறித்த தகவல்களை பாகிஸ்தான் தரப்பிலிருந்து இந்தியரிடம் குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்பே பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலம், கர்த்தார்பூர் குருத்வாராவுக்கு செல்வதற்கு இந்திய யாத்ரீகர்கள் முன்கூட்டியே பதிவு செய்துக் கொள்ள முடியும். அதையடுத்து, பயண நடைமுறைகளுக்கான முன்னேற்பாடுகளை இந்திய அரசு செய்யமுடியும்.
இதைத்தவிர, ராவி ஆற்றின் சமவெளிகளுக்கு குறுக்கே பாலம் கட்டப்படவில்லை. பருவமழை வரும்போது யாத்ரீகர்கள் இந்த வழியில் பயணைப்பது பாதுகாப்பானதா என்பதையும் மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கிறது.
Also Read | டெல்லியில் கோரதண்டவமாடும் பாலைவன வெட்டுக்கிளிகள்
"உலகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படுவதால், கர்தார்பூர் சாஹிப்பை மீண்டும் திறக்க பாகிஸ்தான் தயாராகிறது. சீக்கிய யாத்ரீகர்கள் அனைவரும் கர்தார்பூர் வழித்தடம் வழியாக பயணிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்கிறோம். மகாராஜா ரஞ்சீத் சிங்கின் நினைவு தினமான 2020 ஜூன் 29ஆம் தேதியன்று கர்தாபூர் வழித்தடத்தை மீண்டும் திறக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது என்பதை இந்திய தரப்புக்கு தெரிவிக்கிறோம்” என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி ட்வீட் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.